1937 ஆம் ஆண்டு தேர்தலின்போது தொழிலாளர்களின் கண்ணீரைத் துடைக்க காங்கிரஸ் கட்சி பாடுபடுமென தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைந்த பின் தொழிலாளர்களின் பிரச்சினைகளில் எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாத போக்கையே கடைப்பிடித்து வந்தது. இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் சோசலிசக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு சோசலிசக் காங்கிரசை ஆரம்பித்தபொழுது தேவர் அதற்கு ஆதரவளித்தார். ஒரு முறை மதுரை வந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனை வரவேற்க காங்கிரஸ்காரர்களே தயங்கிய பொழுது தேவர் வரவேற்று சோஷலிச கருத்துக்களைப் பரப்ப உதவி செய்தார்.
1938 ஆம் வருடத்திலிருந்து சோஷலிச காங்கிரஸ் கட்சியின் மீது தேவர் ஈடுபாட்டுடன் இருந்தார் . அதனால் தொழிலாளர்களின் பிரச்சனைகளை எடுத்து செல்லக் கூடிய சரியான தலைவராக சோஷலிச சிந்தனையுள்ள தேவரை நம்பினார்கள் . இடதுசாரிகளான பொதுஉடைமைவாதிகளும் தேவரின் தலைமையை ஏற்கத் துவங்கினார்கள். இதனால் மதுரை தொழிற்சங்க வரலாற்றில் திருப்புமுனையாக புதிய தொழிலாளர் சங்கம் தேவரை தலைவராகவும் ப.ஜீவானந்தத்தை துணைத் தலைவராகவும் கொண்டு அமைக்கப்பட்டது . சித்தாந்தத்தின் அடிப்படையில் இடது சாரி மற்றும் கம்யூனிச கொள்கை கொண்டவர்கள் தேவர் மற்றும் ஜீவாவின் தலைமையில் அணி திரண்டனர்.
1938 செப்டெம்பர் 5 புதிய இடது சாரி சங்கத்தின் கீழ் மகாலட்சுமி ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்திட போராட்டத்தை தீவிரப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீதி தடியடி நடத்தி கைது செய்தனர் . தோழர் ப.ஜீவானந்தம் தாக்கப்பட்டார். அங்காச்சிஅம்மாள் என்னும் பெண் தொழிலாளி இறந்தார். தொழிலாளர் துறை ஆணையர் தொழிலாளர்களின் இந்த எழுச்சிக்குக் காரணம் தேவர் தான் காரணம் என குற்றம் சாட்டினார். தேவர் சட்டப்பிரிவு 143,341 ன்படி கைது செய்யயப்பட்டு சிறையில் ஏழு மாதங்கள் அடைக்கப்பட்டார்.
பின்னர் தோழர் ஜீவா இப்போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். ஆனால் காவல் துறை போராட்டக் காரர்கள் மீது தடியடி நடத்தியதோடு ஜீவாவையும் கைது செய்து சிறையில் அடைத்தது.
இடதுசாரி தலைவரான பி.ராமமுர்த்தி போராட்டத்தை தொடர்ந்தார். பின்பு ஜீவா பிணையில் வெளியில் வந்து பேச்சு வார்த்தையை தொடர்ந்தார். தேவர் பிணையில் வர மறுத்துவிட்ட காரணத்தினால் துணைத்தலைவரான ஜீவாவை ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கேட்டுக் கொண்டார். ஒப்பந்தம் கையெழுத்தானது. சிறையிலிருந்த தொழிலாளர்களுடன் தேவரும் விடுதலை செய்யப்பட்டார். அதனடிப்படையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டனர்.
தேவரின் தொழிற்சங்க போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்தது இப்போராட்டம். பின்னாளில் மதுரையில் இடதுசாரி தொழிலாளர் இயக்கங்கள் வலுவாக வேரூன்ற இப்போராட்டம் காரணமாக அமைந்தது.
படத்தில் இருப்பவர்கள் ..
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தமிழகம் வந்திருந்த போது எடுத்த படம். படத்தில் ப.ஜீவானந்தம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி. ராமமூர்த்தி, சாந்துலால்,சசிவர்ணத்தேவர் முதலியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment